கட்சி மேலிடம் திடீர் முடிவு கர்நாடக காங். தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம்: எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா தொடர்கிறார்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்தாண்டு டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில், 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி, பேரவை கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். அதே போன்று மாநில தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவும் கட்சி மேலிடத்துக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், நேற்று காலை சோனியா காந்தி தலைமையில் கட்சி உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் கே.சி.வேணுகோபால், மதுசூதன் மிஸ்த்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நியமிக்க அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. மேலும், செயல் தலைவர்களாக தற்போதுள்ள ஈஸ்வர் கண்ட்ரேவுடன் கூடுதலாக சதீஷ்ஜாரகிஹோளி, சலீம் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவராகவும் சித்தராமையா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ், மஜத எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு கட்சி தாவியபோது, அவர்கள் மகாராஷ்டிராவில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அங்கு சென்று அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வரும் முயற்சியில் டி.கே.சிவகுமார் தீவிரமாக ஈடுபட்டார். இதனால், பாஜ.வின் கடும் கோபத்துக்கு அவர் ஆளானார். அதன் பிறகு, இம்மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜ அரசு அமைந்த பிறகு, டி.கே.சிவகுமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டார், தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: