8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அலுவலக உதவியாளர் பணிக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்: 34 இடங்களுக்கு 12,500 பேர் போட்டி

வேலூர்: வேலையில்லா திண்டாட்டம் எதிரொலியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அலுவலக உதவியாளர் பணிக்கு இன்ஜினியர்கள், ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கு 12,500 பேர் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இன்ஜினியர்கள் கூட குறைந்த ஊதியத்தில் பல நிறுவனங்களில் சாதாரண வேலை செய்து வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சத்துணவு பணியாளர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எம்.எஸ்சி உள்ளிட்ட முதுகலை பட்டதாரி இளைஞர்கள் பலரும் விண்ணப்பித்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் 34 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது.

இதற்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்டது. இதற்கு இளங்கலை, முதுகலை பட்டதாரி, இன்ஜினியரிங், ஆராய்ச்சி படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் போட்டி, போட்டு விண்ணப்பித்துள்ளனர். ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு சராசரியாக 368 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி பெற்றிருந்தால் போதும் என்று விண்ணப்பங்களில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் பெரும்பாலும் பட்டதாரி, பொறியியல், ஆராய்ச்சி படித்தவர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது கல்வி சான்றிதழ், விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நேர்முக தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானால் நேர்முக தேர்வு தள்ளி போகக்கூடும்’ என்றனர்.

Related Stories: