ஆஞ்சநேயர் கோயிலில் நூதன கொண்டாட்டம்: ‘கும்மாங்குத்து திருவிழா’ 100 பேர் காயம்

திருமலை: ஆஞ்சநேயர் ேகாயில் திருவிழாவையொட்டி ‘கும்மாங்குத்து திருவிழா’ நடந்தது. இதில் சுமார் 100 பேர் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையன்று ஆஞ்சநேயர் கோயில் திருவிழா நடக்கும். இதில் ‘கும்மாங்குத்து திருவிழா’ சிறப்பு பெற்றதாகும். ஆண்கள் ஏராளமானோர் திரண்டு  ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொள்வது இவ்விழாவின் சிறப்பாகும். இதில் பலர் காயமடைந்து, தகராறு ஏற்படுவதால் இந்த திருவிழா நடத்த போலீசார் தடை வித்துள்ளனர்.

ஆனால் இந்த திருவிழாவை நடத்தாவிட்டால் எங்கள் ஊருக்கு கெடுதல் ஏற்படும். எனவே இந்த தடையை நீக்க வேண்டும் என்று மக்கள், போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 20 நிமிடம் மட்டுமே விழா நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். அதன்படி நேற்று மாலை ‘கும்மாங்குத்து திருவிழா’ நடந்தது. இதையொட்டி ஆண்கள் அனைவரும் ஆஞ்சநேயர் கோயில் முன்பு ஒன்று கூடினர்.

தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ஆஞ்சநேயர் கோயில் எதிரே இருக்கும் அக்னி குண்டத்தில் கிடைக்கும் சாம்பலை எடுத்து காயத்திற்கு மருந்தாக பூசி கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: