மதுரை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா ஆய்வு மையம்: கலெக்டர் பேட்டி

மதுரை: ‘மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரிக்கு  கொரோனா அறிகுறி இல்லை. மதுரையில் விரைவில்  கொரோனா ஆய்வு மையம் தொடங்கப்படும்’ என கலெக்டர் வினய் கூறினார்.  இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த இரட்டையர்கள் கொரோனா சந்தேகம் காரணமாக நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த 35 வயதுடைய சுங்கத்துறை அதிகாரி ஒருவர், பணி நிமித்தமாக இத்தாலி சென்று விட்டு, கடந்த பிப்.29ம் தேதி மதுரை திரும்பினார். இவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவருக்கு, காய்ச்சல் குணமடைந்து விட்டது.

ஆனால் தொண்டை ெதாற்று குணமாகவில்லை. கொரோனா பாதிப்பு சந்தேகம் காரணமாக, இவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்தார். இவர், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும்,  திண்டுக்கல்லை சேர்ந்த இரட்டையர்கள் சளி மற்றும் தொண்டையில் தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரி மாணவர்களான இருவரும், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையிலிருந்து, நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கொரோனா சிறப்பு வார்டில் இருவரும் தற்போது அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை கலெக்டர் வினய், அரசு மருத்துவமனையில் கொரானா சிகிச்சை மையத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மத்திய அரசுத்துறை அதிகாரிக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த இரட்டையர்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே நகருக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மதுரையில் கொரோனா ஆய்வு மையம் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: