தங்கள் குடும்பத்தில் எனக்கு இடம் கொடுத்த ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி: ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று அந்த கட்சியில் இருந்து நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான ஜோதிராதித்ய சிந்தியா திடீரென விலகினார். அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் மத்திய பிரதேச அரசு கவிழும் சூழல் எழுந்தது. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், சிந்தியா அக்கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டார். ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் குடும்பத்திற்கு அழைத்து, அதில் எனக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனது வாழ்க்கையையே திருப்பிப் போடும் 2 நிகழ்வுகள் எனக்கு நடந்துள்ளது. அதில் ஒன்று எனது தந்தையை இழந்த நாள். மற்றொன்று, நான் என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையைத் தேர்வு செய்ய நேற்று முடிவு செய்ததாகும். நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு, கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரசின் இன்றைய நிலையை கண்டு நான் வருத்தம் அடைகிறேன். காங்கிரசால் இனி மக்களுக்கு சேவை செய்ய முடியாது. காங்கிரசில் இளம் தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை. காங்கிரஸ் கட்சி உண்மையை உணர மறுக்கிறது. முன்பு இருந்ததை போல காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை, என கூறியுள்ளார். இதனிடையே சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: