நாமக்கல் எஸ்பி ஆபீசில் ஆஜர்: ஆதாரங்களை அழித்த போலீஸ் விஷ்ணுபிரியா தந்தை புகார்

நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக போலீசார் மீது அவரது தந்தை புகார் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா கடந்த 2015 செப்டம்பர் 18ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை நாமக்கல் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் கோவை நீதிமன்றம் மூலம் கடந்தாண்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார், நாமக்கல் எஸ்பி அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகாரளித்தார்.

அதில், விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட, லேப்டாப்,  செல்போன் ஆகியவற்றில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து, அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்குமார் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தார். அவரிடம் ஏடிஎஸ்பி ரவிக்குமார் விசாரணை நடத்தினார். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.  

விசாரணை முடிந்து வெளியே வந்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறுகையில், விஷ்ணுபிரியாவின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை அப்போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள் ராஜு, ராதாகிருஷ்ணன், முதல்நிலை காவலர் முத்துக்குமார், தலைமை காவலர் ரவிக்குமார் ஆகியோர் அழித்துள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என புகாரளித்தேன். இதுகுறித்து முழுமையாக விசாரிப்பதாக ஏடிஎஸ்பி என்னிடம் கூறினார் என்றார்.

Related Stories: