நாகர்கோவில்: பள்ளிகளில் பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறைகளில் உணவு அருந்தும் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது. இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதை மாணவர்கள் திறந்த வெளியிலும் வராண்டாவிலும் ஆங்காங்கே அமர்ந்து உண்ணுகின்ற வழக்கம் பல பள்ளிகளில் இருந்து வருகிறது.
எனவே, மாணவ, மாணவிகள் சுகாதாரமான முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.