திருவள்ளூர் அருகே அவலம்: சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் செல்லும் சடலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கலவாக்கம் பழைய கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாட்டுக்கு இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. மின் தகனமேடை, குடிநீர், மின்விளக்கு உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனால் சடலத்தை விவசாய நிலத்தின் வழியாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருவள்ளூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், நேற்று கிராமத்தில் நீலம்மாள் (65) உடலை நெல் விளைந்துள்ள நிலத்தின் வழியாக தூக்கி சென்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’50 ஆண்டுகளாக இதே நிலைமைதான் உள்ளது. கிராமத்தில் இறப்பு ஏற்படும்போது சடலத்தை ஒவ்வொரு முறையும் வயலில் இறங்கி எடுத்து செல்கிறோம். எனவே சுடுகாட்டுக்கு பாதை ஏற்பாடு செய்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றனர்.

Related Stories: