பெரியாறு தந்த பென்னிகுக் 109வது நினைவுதினம் இன்று அணையில் இழந்த உரிமையை மீட்டெடுக்குமா தமிழக அரசு?: தென்தமிழக வாழ்வாதாரம் தந்தவருக்கு விவசாயிகள் அஞ்சலி

கம்பம்: தென் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கின் 109வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அணையில் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக். பல்வேறு இன்னல்களுக்கு இடையே, தனது சொத்துகளை விற்று 1895ல் பெரியாறு அணையை கட்டி முடித்தார். பின்னர் சில காலம் தமிழகத்தில் தங்கியிருந்தார். பெரியாறு அணையால் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்வதைக் கண்ட மகிழ்ச்சியில், 1903ல் சொந்த நாடான இங்கிலாந்து சென்றார்.

அங்கு மனைவி, மக்களுடன் வாழ்ந்த அவர், 1911 மார்ச் 9ல் காலமானார். இன்று அவரது 109வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரியாறு அணையை கட்டி, வாழ்வாதாரத்தை உயர்த்திய பென்னிகுக்கை தென் தமிழக மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். அவரது நினைவுதினத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தற்போது, பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை கொஞ்சம், கொஞ்சமாக பறிபோகிறது. இந்த உரிமைகளை மீட்க தமிழக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘2014ல் உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, பெரியாறு அணையில் பேபி அணையை பலப்படுத்துதல், வல்லக்கடவு வழியாக பாதை அமைத்தல், பெரியாறு அணைக்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்லுதல், தேக்கடியில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை படகுகளை இயக்க அனுமதி பெறுதல் ஆகியவற்றிற்கு தமிழக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெரியாறு அணையில் இழந்த உரிமைகளை திரும்பப்பெறுவதற்கு, பென்னிகுக் நினைவு நாளில் சபதமேற்க வேண்டும்’’ என்றார்.

லண்டன் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி:பென்னிகுக் குறித்து தென்தமிழக மக்கள் சரியாக அறியாத நிலையில், 2011ல் லண்டனில் மேற்படிப்புக்காகச் சென்ற தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சந்தன பீர்ஒலி, இங்கிலாந்தின் சர்ரே மாவட்டத்தில் உள்ள கேம்பர்லி நகரில், செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ள பென்னிகுக் கல்லறையையும், அவரது வம்சாவழியினரையும் கண்டு பிடித்தார். அவரது முயற்சியால் பழமையான அந்தக் கல்லறை 2017ல் புதுப்பிக்கப்பட்டது. இதுகுறித்து அங்குள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன்பின், இரண்டு ஆண்டுகளாக தேவாலய அதிகாரிகள், அவரது வம்சாவழியினர், லண்டன் வாழ் தமிழர்கள் மூலம் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் பென்னிகுக் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், பென்னிகுக்கின் 109வது நினைவுதின அஞ்சலி கூட்டம், அவரது கல்லறை உள்ள லண்டன் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. தேவாலய குருமார்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பென்னிகுக் வம்சாவழியினர், இந்திய தூதரக அதிகாரிகள், சந்தன பீர்ஒலி மற்றும் லண்டன் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: