தூங்கும் தூய்மை இந்தியா திட்டம் பயன்பாட்டிற்கு வராத தனிநபர் கழிப்பறைகள்: கவனிப்பாரா கலெக்டர்?

அருப்புக்கோட்டை: தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமும், வாம்பே திட்டத்தின் மூலமும் மற்றும் மத்திய அரசு திட்டத்தின்படி தனிநபர் கழிப்பறைகள்  கட்டப்பட்டுள்ளது.  அருப்புக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் 36 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமிர்தாபுரம் காலனி, புளியம்பட்டி ராமானுஜபுரம் தெரு, திருச்சுழி ரோட்டில் உள்ள நேருநகர், தேவாடெக்ஸ் காலனி, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகள் உபயோகப்படுத்தப்படாமல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது.   

பல லட்ச ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் நகராட்சி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பஸ்நிலையத்தில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்படாமலே உள்ளது. கட்டணக் கழிப்பறை குறிப்பிட்ட நேரத்தில் தான் திறந்திருக்கும். இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நகராட்சி காலனி அம்மன் கோயில் தெரு, முஸ்லிம் தெரு, ராமசாமிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்து போதிய பராமரிப்பின்றியும், மின்விளக்கு, தண்ணீர் வசதியின்றியும் மூடப்பட்டுள்ளது. நகரில் போதுமான கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தும் பயன்பாடு இல்லாததால் பொது இடங்களில் திறந்தவெளியில் பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது.

பெரும்பாலும் நகரத்தில் வளர்ச்சி பகுதிகளான நேருநகர், தேவாடெக்ஸ் காலனி, விவிஆர் காலனி, செவல் கண்மாய் பகுதி, ரயில்வே பீடர் ரோடு, பெரிய கண்மாய் ஆகிய பகுதிகளை திறந்தவெளியே கழிப்பிடமாக உள்ளது. மேலும் நகரில் தேவையான இடங்களில் கழிப்பறைகள் கட்டவேண்டும். எனவே, நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க அந்தந்த மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  அப்போது தான் கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: