சுற்றுலா, கல்வி விசாவில் வந்தவர்களுக்கு முதல் வாய்ப்பு: ஈரானில் சிக்கியுள்ள 721 மீனவர்களை மீட்டு வர மேலும் 10 நாட்களாகலாம்: தூதரக அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில்: ஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு மீட்டு வர 10 நாட்கள் ஆகலாம் என்று தூதரக அதிகாரிகள் மீனவர்களிடம் கூறியுள்ளதால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. அங்கு மீன்பிடிக்க சென்ற குமரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 721 பேர் தீவுகளில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இவர்கள் குமரி மாவட்ட கலெக்டரையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை  வைத்திருந்தனர்.

இதைதொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள், இந்தியாவிலிருந்து ஈரானுக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள், கல்வி விசாவில் வந்தவர்களைத்தான் முதலில் அனுப்பி  வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர்தான் மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று  தெரிவித்துள்ளனர். மேலும் நீங்கள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுவிடுங்கள், அப்போது உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த மீனவர்கள் தங்களை உடனே இந்தியாவுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

13 பேரை கொரோனா தாக்கியது; மீனவர்களுக்கு பாதிப்பு இல்லை

கொரோனா பாதிப்பு தொடர்பாக ஈரானில் உள்ள மீனவர்கள் பல்வேறு வீடியோக்களையும், ஆடியோக்களையும் உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:  ஈரானில் கீஸ் தீவில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இந்த தீவில் யாரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை. அதே வேளையில்  13 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக கூறுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள்  தாமதம் செய்யாமல் எங்களை இந்தியாவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எங்கள் முதலாளிகள் நீங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.  எனவே சிறப்பு விமானம் மூலம் எங்களை  அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: