குமரி எஸ்எஸ்ஐ வில்சன் கொலை எதிரொலி: மாநில எல்லை செக்போஸ்ட்களில் எஸ்.ஐ., ஏட்டுகளுக்கு துப்பாக்கி

சேலம்: கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநில எல்லைகளில் இருக்கும் செக்போஸ்ட்களில் பணியாற்றும் எஸ்ஐ, ஏட்டு உள்ளிட்ட போலீசாருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள செக்போஸ்ட்டில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலை வழக்கை தேசிய  புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிறப்பு எஸ்ஐ வில்சன், பணியில் இருந்தபோது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அவரிடம் இல்லை. இதனால், தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்த முடியாமல்  உயிரிழந்தார்.

தற்போது, தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள செக்போஸ்ட்களில் பணியாற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்காப்பிற்காக அதனை பயன்படுத்திக் கொள்ளவும்,  தீவிரவாத செயலில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டால், துப்பாக்கிச்சூடு நடத்தவும் அறிவுறுத்தி அதனை கொடுத்துள்ளனர்.இந்தவகையில் கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மாநில எல்லையை பகிரும் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் செக்போஸ்ட்களில் பணியாற்றும் அனைத்து  போலீசாருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொளத்தூர் செக்போஸ்ட்டில் சுழற்சி முறையில் பணியாற்றும் 1 எஸ்ஐ, ஒரு சிறப்பு எஸ்ஐ, 2 ஏட்டுகளுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லையில் இருக்கும் 4 செக்போஸ்ட்களில் பணியில் இருக்கும் போலீசாருக்கு துப்பாக்கிகள் கொடுத்துள்ளனர். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், அதனை பயன்படுத்திக் கொள்ள உயர்  அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையையடுத்து, மாநில எல்லைகளில் இருக்கும் செக்போஸ்ட் போலீசாருக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை கொடுத்துள்ளோம்.  இது மக்களை மட்டுமின்றி அவர்களையும் தற்காத்துக் கொள்ள உதவும்,’’ என்றனர்.

Related Stories: