எகிப்து சுற்றுலா கப்பலில் 18 தமிழர்கள் சிக்கித்தவிப்பு: 171 பேருடன் நைல் நதியில் ஏ சாரா கப்பல் முடக்கம்

கெய்ரோ: கொரோனா பரவலை அடுத்து எகிப்தில் முடக்கப்பட்டு இருக்கும் சுற்றுலா கப்பலில் சிக்கியிருக்கும் 18 தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். லக்ஸார் நகர் அருகே நைல் நதியில் பாதிப்புக்குள்ளான ஏ சாரா என்கிற பயணிகள் கப்பல் முடக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தாக்கிதால் அந்த கப்பல் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த 171 பேரில் 101 பேர் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள். இதில் 18 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 57 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த பொறியாளர் ஆவார். இவர் அலெக் ஷாண்ரியா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இவரது மனைவி கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளார். சரியான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய தூதரகமும், தமிழக அரசும் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேலத்தை சேர்ந்த சுற்றுலா இயற்பாட்டாளர் மூலம் தமிழகத்தை சேர்ந்த 28 பெரும் கடந்த பிப் 29-ம் தேதி தங்களது எகிப்து சுற்றுலா பயணத்தை தொடங்கினர். இவர்கள் திட்டமிட்டப்படி மார்ச் 7-ம் தேதி நாடு திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து 14 நாட்கள் கண்காணிப்பிற்காக அவர்கள் எகிப்து கப்பலில் முடக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஏ சாரா கப்பலில் சுற்றுலா சென்ற அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ளது. அதேபோல இந்திய அரசும் தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை வலுத்து வருகிறது.

Related Stories: