டேராடூன் பெண்ணின் நெகிழ்ச்சியான பேச்சு: உங்களை கடவுளாக பார்க்கிறேன்: மவுனமாகி நின்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘‘நான் கடவுளை பார்த்ததில்லை. ஆனால், உங்களில் கடவுளை பார்க்கிறேன்’’ என முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட டேராடூன் பெண் கண்ணீர் மல்க கூற, பிரதமர் மோடி உணர்ச்சிப் பெருக்கால் ஒரு நிமிடம் மவுனமாகி நின்றார்.

மரபுசார் மருந்து வகைகளை மலிவான விலையில் விற்பனை செய்ய ‘பிரதான் மந்திரி பாரதீய ஜன் அவுஷதி பரியோஜனா’ திட்டம் கடந்த 2013-14ல் தொடங்கப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் மலிவு விலை மருந்துக் கடைகள் நிறுவப்பட்டன. இத்திட்டம் தொடங்கப்பட்ட மார்ச் 7ம் தேதி ஆண்டுதோறும் ‘ஜன் அவுஷதி’ தினமாக அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில், ‘ஜன் அவுஷதி’ தினத்தையொட்டி, பிரதமர் மோடி, திட்டப் பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார். அப்போது டேராடூனைச் சேர்ந்த பெண் தீபா ஷா பேசிய சம்பவம் மிகவும் நெகிழ்ச்சிப்பூர்வமாக அமைந்தது. கடந்த 2011ல் முடக்குவாத நோயால் அவரது கால்கள் பாதிக்கப்பட்டன.

அதைப் பற்றி பேசிய அப்பெண், ‘‘2011ல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட போது, விலை அதிகமான மருந்துகளை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். மருந்து செலவினால் குடும்பம் நடத்துவதே கஷ்டமாகி விட்டது. அந்த நேரத்தில் மலிவு விலை மருந்து திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததன் மூலம் எனக்கு மாதம் 3,500 மிச்சமாகிறது. என்னை குணப்படுத்த முடியாது என டாக்டர்களே கைவிரித்து விட்ட நிலையில்தான் உங்கள் (பிரதமர் மோடி) குரல் எனக்குள் நம்பிக்கை அளித்தது. இன்று நான் குணமடைந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அரசு செய்த உதவிகள் தான். இதற்காக பிரதமர் மோடிக்கும், உத்தரகாண்ட் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.  மேலும் அவர் பேசுகையில், ‘‘நான் கடவுளைப் பார்த்ததில்லை. ஆனால் உங்களில் கடவுளை பார்க்கிறேன்’’ என கண்ணீர் மல்க கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடி, உணர்ச்சிப் பெருக்கால் ஒரு நிமிடம் மவுனமாகிப் போனார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘நீங்கள் உங்கள் சொந்த பலத்தின் மூலம் நோயை வென்றுள்ளீர்கள். உங்கள் தைரியம் தான் உங்கள் கடவுள். அதே தைரியம்தான் மிகப்பெரிய இன்னல்களில் இருந்தும் மீண்டு எழுந்து வருவதற்கான பலத்தை உங்களுக்கு தருகிறது. உங்களுக்குள் அந்த தைரியம் எப்போதும் இருக்க வேண்டும்,’’ என்றார். முன்னதாக, தீபா ஷா பேசுவதற்காக கஷ்டப்பட்டு எழுந்து நின்றார். அவர் சிரமப்படுவதைப் பார்த்த மோடி, அமர்ந்தபடியே பேசுமாறு கேட்டுக் கொண்டார். மரபுசார் மருந்துகளைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, ‘‘மரபுசார் மருந்துகளைப் பற்றி முந்தைய அனுபவங்களை வைத்து இப்போதும் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். மலிவான விலையில் கிடைப்பதால் அதில் ஏதோ குறைபாடுகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இது வேறெந்த மருந்தை காட்டிலும் தரத்தில் குறைந்ததில்லை. சிறந்த ஆய்வகங்கள் மூலமாக தரச்சான்று வழங்கப்படுபவை. இவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவை. ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பில் மலிவாக கிடைக்கிறது,’’ என்றார்.

பிரதமரின் டிவிட்டர் கணக்கு பெண்களிடம் ஒப்படைப்பு

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, அன்றைய தினம் தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழும் பெண்கள் வசம் தனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைக்க இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, பிரதமரின் டிவிட்டர் கணக்கு, சர்வதேச பெண்கள் தினமான இன்று, பெண் சாதனையாளர்களால் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரிசக்தி’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். விருது பெறும் சாதனை பெண்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

Related Stories: