யார் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் ஒரு நாட்டை இந்த உலகில் காட்ட முடியுமா?... வெளியுறவு அமைச்சர் கேள்வி

டெல்லி: யார் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் ஒரு நாட்டை இந்த உலகில் காட்ட முடியுமா என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டம் நடந்தது. ஆனால், அங்கு போராட்டம் அடங்கிய நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்டம் பரவியது. டெல்லியில் இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் எக்னாமிக் டைம்ஸ் சார்பில் சர்வதேச வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; சிஏஏ-வை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதலும், கொள்கைகளும் உள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என கூறும் ஒரு நாட்டை காட்டுங்கள் பார்ப்போம். எந்த நாடும் அவ்வாறு கூறுவதில்லை’’ என்றார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தால் நட்பு நாடுகளை இழந்து வருகிறோமே எனக் கேட்டதற்கு, யாரெல்லாம் நமது நண்பர்கள் எனப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு எனத் தெரிவித்தார்.

நாடற்ற அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பாராட்ட வேண்டிய விஷயம். நமக்கு (இந்திய மக்கள்) எந்த வித பிரச்சனைகளும் வராத வகையில் சிஏஏ செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர்; ஐநா மனித உரிமை கவுன்சில் தலைவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை. அது பிரச்சினையல்ல. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டபோது அது குறித்து மனித உரிமை ஆணையம் ஏதும் செய்ததா? கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தைத் தவறாகவே மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கையாண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: