மதுரை நகரை சர்வதேச சுற்றுலா மையமாக்கும் பணி மீனாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் துவக்கம்

மதுரை: மதுரை நகரை சர்வதேச சுற்றுலா மையமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, மீனாட்சி அம்மன் கோயிலை புனரமைக்கும் பணிகள் துவங்கி  உள்ளது. இப்பணியை 2022ம் ஆண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், ரூ.1000 கோடி செலவில் மதுரை நகரில் வைகை ஆறு, முக்கிய வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சீரமைக்கப்பட்டு  வருகின்றன. பல்லடுக்கு பார்க்கிங் வசதியுடன் பெரியார் பஸ் நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரை சர்வதேச சுற்றுலா  மையமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். தற்போது மதுரை நகர சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கோயிலை மேலும் அழகுபடுத்த  கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2022ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.இந்நிலையில் கோயிலின் பொற்றாமரை குளத்தை சுற்றி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இதுதவிர, வீரவசந்தராய மண்டபம் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பில்  புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், குடமுழுக்கு விழா குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும்  கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: