மாசி திருவிழா கோலாகலம் கோட்டை மாரியம்மன் தேர் பவனி

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி அம்மன் தேரில் பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அருள்மிகு  கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 10ம் நாள் திருவிழாவான நேற்று காலை திண்டுக்கல் தெற்குரத வீதி, பொடிக்கார வெள்ளாளர் சங்கம் சார்பில் அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குட பாலை கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அங்குவிலாஸ் குடும்பத்தினர் சார்பில் மின்ஒளி அலங்கார ரதத்தில் கோட்டை மாரியம்மன் வெள்ளைத்துயில் பட்டு உடுத்தி, வெள்ளைப்பனி பூண்டு, வீணாகானம் செய்து எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். இதில் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அங்கிங்கு இன்னிசை கச்சேரி நடைபெறும்.

Related Stories: