சென்னசமுத்திரம் அரசு பள்ளியில் காஸ் இல்லாததால் விறகு அடுப்பில் சத்துணவு சமைக்கும் அவலம்

செங்கம்: செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் அரசு பள்ளியில் காஸ் சிலிண்டர் இல்லாததால், விறகு அடுப்பில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கம் அடுத்த சென்னசமுத்திரம்  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் சமையல் கூடம் எந்த அடிப்படை வசதியும் இன்றி காணப்படுகிறது. அது மட்டுமின்றி உணவு சமைக்க வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாததால், சமையலர்கள் விறகு கட்டை மற்றும் தேங்காய் மட்டை கொண்டு சத்துணவு சமைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. விறகு அடுப்பில் சமைப்பதால் பள்ளியில் அதிகளவில் புகை சூழ்ந்து கொள்கிறது.

மேலும், உணவில் புகை வாடை வீசுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர சமையல் கூடமும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னசமுத்திரம் அரசு பள்ளியில் சமையல் கூடத்தை ஆய்வு செய்து, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு தடையின்றி சமையல் காஸ் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: