கோவையில் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு

கோவை: கோவையில் பள்ளி வாசலுக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள வேதாம்பாள் நகரில் இதாயத்துல் முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. இங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் பள்ளி வாசலுக்குள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த ஊழியர்கள் பார்த்தபோது திரியுடன் பீர்பாட்டில் வெடிக்காமல் சிதறி கிடந்தது. தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அங்கு குவிந்தனர். உடனடியாக இது குறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பள்ளி வாசல்களுக்கு பாதுகாப்பு கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு

கோவையில் பள்ளி வாசல்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி இஸ்லாமிய அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.கோவை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று போலீஸ் கமிஷனர் சுமித்சரணை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், நேற்று முன்தினம் இரவு கணபதி வேதாம்பாள் நகர் பள்ளி வாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை. இருந்த போதிலும் உடனடியாக இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது போல் எவ்விதமான தாக்குதலும் நடக்காமல் இருப்பதுடன், அனைத்து பள்ளி வாசல்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: