பங்குசந்தைகளையும் விட்டு வைக்காத கொரோனா; இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,206 புள்ளிகள் சரிந்து 37,263 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் சரிந்து 10,944 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டதுடன், பங்குச்சந்தைகள் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. உலகமகா கோடீஸ்வரர்களின் 32 லட்சம் கோடி பணம் கையை விட்டு போய் விட்டது. கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன.

பல ஆயிரம்  புள்ளிகள் சரிந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி, பல நாடுகளின் பொருளாதார  வளர்ச்சிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. உலகில் முன்னணியில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் 500 பேர் மட்டும் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவினால் சுமார் 444 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அதாவது, 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு அவர்கள்  பங்கு மதிப்பை இழந்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதன் பிறகு தப்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் மிக மோசமான அளவுக்கு பொருளாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 1000 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. இது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: