தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன? மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: தமிழக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டநிலை குறித்தும், 2020ல் தொடங்கப்பட உள்ள இத்திட்டங்கள் பற்றியும் மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

* கடந்த 2015ல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தமிழகத்தில் இதன் நிலை பற்றி நகரங்கள் வாரியாக விரிவாக தெரிவிக்க வேண்டும்.

* ஒருங்கிணைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என்ன? அதை நகரங்கள் வாரியாக விரிவாக தெரிவிக்கவும்.

* ஸ்மார்ட் சிட்டிகளில் குழாய்கள் மூலம் காஸ் விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதின் தற்போதைய நிலைமை என்ன?

* தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 2020ல் அமல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் என்ன? அவற்றை முடிப்பதற்காக திட்டமிடப்பட்ட தேதிகள் ஆகியவற்றை நகரம் வாரியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் கேட்டுள்ளார்.

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்துர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மொத்தம் ரூ.1464.56 கோடி மதிப்புள்ள 33 ஒப்பந்தங்கள் (டெண்டர்) வெளியிடப்பட்டு உள்ளன. ரூ.11,795.87 கோடிக்கு மொத்தம் 237 திட்டங்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 96 திட்டப்பணிகளில் ரூ.648.45 கோடி மதிப்புள்ள பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த 11 நகரங்களுக்கான மொத்த திட்டப் பணிகளின் எண்ணிக்கை 366. மொத்த செலவுத் தொகை ரூ.13,908.88 கோடி.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமல்படுத்துவதில் எந்த தாமதமும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த நகரத்திலும் குழாய் மூலம் காஸ் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை கோயமுத்தூரில் முதல் சுற்றுப் பணி அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மதுரை, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூரில் 2வது சுற்றுப் பணி 2022, பிப்ரவரிக்குள்ளும் தொடங்கப்படும். திருப்பூர், நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 3ம் சுற்றுப் பணி 2022 ஜூன் மாதத்துக்குள்ளும், ஈரோட்டில் 4வது சுற்றுப் பணி 2023 ஜனவரியிலும் தொடங்கப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்படும் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஹர்தீப் சிங் பதிலளித்துள்ளார்.

Related Stories: