32வது பட்டமளிப்பு விழா டாக்டர்கள் பற்றாக்குறை தான் தரமற்ற மருத்துவக் கல்விக்கு காரணம்: கஸ்தூரி ரங்கன் பேச்சு

சென்னை: நமது நாட்டில் மருத்துவ சேவைக்கு தேவைப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நாம் உருவாக்க முடியாமல் போனதற்கு அதிக கல்வி கட்டணம் மற்றும் தரமற்ற மருத்துவ கல்வியும்தான் காரணம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மருத்துவ பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், அணு விஞ்ஞானி சிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 17 ஆயிரத்து 590 மாணவ- மாணவியர் பட்டம் பெற்றனர். அவர்களில் நேரடியாக 700 பேருக்கு தமிழக ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். 16 ஆயிரம் பேருக்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் பட்டம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விழாவில் அணு விஞ்ஞானி சிதம்பரம் பேசும் ேபாது, ஆர்ட்பீஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என்பது பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் மருத்துவ சேவைத்துறைகளிலும் இதன் பயன்பாடு கணிசமாக இருக்கும். அதன் மூலம் இதன் பங்கு அதிகரிக்கும் என்றார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் பேசும்போது, இந்திய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் நமக்கு தேவைப்படுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு மருத்துவர்களும் செவிலியர்களையும் நாம் உருவாக்க முடியாமல் போனதற்கு அதிக அளவிலான கல்விக் கட்டணங்களும், தரமில்லாத மருத்துவக் கல்வியும்தான் காரணம்.

புதிய கல்விக் கொள்கை மூலம் கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையிலும், கிராம மக்களுக்கு முழுமையான சுகாதார வசதிகள் கிடைக்கும் நோக்கிலும் அமைந்திருக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

Related Stories: