புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமனத்தை துணைநிலை ஆளுநர் ரத்து செய்தது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என்று துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது: யூனியன் பிரதேச சட்டம் பிரிவு 44(1)ன் கீழ் முடிவு எடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அகில இந்திய அளவிலான விண்ணப்பங்களை வரவேற்கும் துணை நிலை ஆளுநரின் அறிவிப்பு செல்லும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசியலமைப்பிற்கு உட்பட்டவர்களிடம் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மனக்கசப்பு அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கு நல்லதல்ல. கருத்து மாறுபாடு ஏற்பட்டால் அதை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: