தாளவாடி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா: கர்நாடக பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில் தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பெருவாரியாக பங்கேற்றனர். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று காலை அபிஷேக ஆராதனை, அம்மன் மலர் ஊஞ்சல் வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று இரவு மலர் அலங்கார தரிசனமும், பின்னர் அம்மன் திருவீதி உலா, மைசூர் சாலை, திப்பு சர்க்கிள், பஸ்நிலையம், தலமலை ரோடு, ஒசூர் ரோடு, தொட்டகாஜனூர் சாலை, நாயக்கர் வீதி பகுதிகளில் நடைபெற்றது.

தாளவாடி நகர்ப்பகுதி முழுவதும் வீதிகளில் கோலமிட்டு அம்மனை வரவேற்று வழிபட்டனர். பின்னர் இன்று காலை 9 மணிக்கு மலர் ஊஞ்சல் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பேத்கார் வீதியில் உள்ள விநாயர் கோயிலுக்கு வரும்போது மலர்ப்பாதை மீது நடந்து வந்து விநாயகர் வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கோயில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கினார். பின்னர் விசேச பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி  சண்டி மேளம், வீரபத்ரா நடனம், பீரப்பா நடனம், பசவேஸ்வரா குழுவினரின் டிரம்ஸ், மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  தாளவாடி மலைப்பகுதிகளில் உள்ள கோயில் குண்டம் திருவிழா நிகழச்சிகளில் கோயில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். மேலும் இப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் குண்டம் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தால் தாளவாடி நகர்ப்பகுதியில் எந்த விழாவிற்கும் மைக் செட் வைக்க அனுமதியில்லை.

இவ்விழாவில் தாளவாடி சுற்றுவட்டார பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: