தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் செயல்பட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை

மதுரை: தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஆகியோர் 2 வாரங்களுக்கு பதவி வகிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் மகன் விமலேஷ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் சின்னமனூர் பகுதி மொத்தம் 10 ஒன்றிய கவுன்சிலர்களை உள்ளடிக்கியது. அதில் ஒரு ஒன்றியத்திற்கான கவுன்சிலர் பதவியில் அதிமுக கட்சியின் சார்பாக தனது தாயார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றிபெற்றதை தொடர்ந்து, தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 2 முறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு முறையும் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று (4ம் தேதி) தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து எனது தாயார் நேற்று முன்தினம் ( 3ம் தேதி) இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கிடைக்கவில்லை.

இது சம்பந்தமாக போடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருடைய தாயார் ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், காணாமல் போகி இரண்டு தினங்களாகிறது. அவரை மீட்பதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்குள் தேர்தல் நடத்துவதற்கான காரணங்கள் என்ன? என்று கேட்டறிந்த நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் செயல்பட இடைக்கால தடை விதித்து மனு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

Related Stories: