வீட்டின் அறைகள் எண்ணிக்கை, கட்டுமான பொருட்கள், வாகனங்கள், சாப்பிடும் உணவு தானியம்... மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 34 கேள்விகள்

டெல்லி : நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கேட்கப்படும் கேள்விகள் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கேடுப்பு 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டும்.இதன்படி அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பதிவாளர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதன் விதிமுறைகளை குறிப்பிட்டு உள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கி 2 கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இடம்பெறும் 34 கேள்விகளில் 31 கேள்விகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டின் தரை, சுவர், அறைகளின் எண்ணிக்கை மற்றும் கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்களின் விவரம் அந்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. சைக்கிள், இரு சக்கர வாகனம்,கார் உள்ளதா என்பது போன்ற வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன. சாப்பிடும் முக்கிய உணவு தானியம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம் வருமாறு:-

1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.

15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்பட உள்ளது. இதில் 14 கேள்விகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: