வேலூரில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ஓரம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாநகருக்குள் செல்லும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. வேலூர் மாநகரத்தின் ஊடாக சென்னை- பெங்களூரு, விழுப்புரம்-மங்களூரு, சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. இதில் வேலூர் உட்பட நகரம், பேரூர், சிற்றூராட்சிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

அவ்வபோது இந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் நகருக்குள் நுழையும் சேண்பாக்கம் தொடங்கி புதுவசூர் வரை உள்ள பகுதியில் அதன் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து தனியார் கட்டிடங்கள், கூரைகள், வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனால் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வணிக வளாகங்களில் வர்த்தகம் செய்வோரின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் மாநகரில் சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் நடவடிக்கையை ேநற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது.

இதற்காக நேற்று காலை 10 மணியளவில் முதலில் சத்துவாச்சாரி காவல்நிலையம் தொடங்கி கெங்கையம்மன் கோயில் வரை உள்ள இருபக்க சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை எல் அண்ட் டி நிறுவனத்தினர் மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவன ஊழியர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘3 நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே எங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம். எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தராதது ஏன்? என்று ஆக்கிரமிப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எல் அண்ட் டி நிறுவனத்தினர், ‘நேற்றே (நேற்று முன்தினம்) உங்களுக்கு நாங்கள் தனிப்பட்ட முறையிலும், காவல்துறை மூலமும் தகவல் அளித்து விட்டோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்கிறோம்’ என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வேலூர் நகரில் சர்வீஸ் சாலை சத்துவாச்சாரி பகுதியில் 8 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. கால்வாய் 1.5 மீட்டர் உள்ளது. ஆக்கிரமிப்புகள் 1.5 மீட்டர் வரை உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் கால்வாய் அங்கு அமைக்கப்பட்டு தற்போதுள்ள மழைநீர் கால்வாய் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: