ராஜிவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக் மன்னிப்பை ஏற்க மாட்டோம் வீடியோ வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அதில் பலரும் ராஜிவ்காந்தி நினைவிடத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் என்பவர், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவதூறாக வசனம் பேசி டிக்டாக் செயலியில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையிலான கட்சியினர் பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டிக்டாக் செயலியில் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில், ராஜிவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக் வீடியோ பதிவிட்டிருந்தேன். அதை ஒருசிலர் பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

என்னுடைய டிக்டாக் ஆப்பில் இருந்து வீடியோ பதிவை நீக்கி விட்டேன். இந்த வீடியோவால் காங்கிரஸ் கட்சியினரின் மனது புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறு நடக்காது என வெளியிடப்பட்டு இருந்தது.

இருந்தபோதிலும் இதை ஏற்காத காங்கிரஸ் கட்சியினர், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரசார் டிஜிபியிடம் புகார்

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு டிக்டாக் வெளியிட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை படித்து பார்த்த டிஜிபி திரிபாதி, சம்பந்தப்பட்ட வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: