நெல்லை அறிவியல் மையத்தில் இஸ்ரோ மாதிரி அரங்கு விரைவில் அறிமுகம்: விமானப்படை சிறிய விமானம் காட்சிக்கு தயாராகுது

நெல்லை:  நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் இஸ்ரோ மாதிரி அரங்கு விரைவில் அமைக்கப்படுகிறது. தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று விரைவில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இதற்காக அதன் பாகங்கள் அறிவியல் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நெல்லை கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட அறிவியல் மையம் தமிழகத்தின் முக்கிய அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி கூடமாக விளங்குகிறது. இந்த மையம் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்கள் தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் பொதுமக்கள் பார்வைக்காக இயங்குகிறது. ஏராளமான அறிவியல் படைப்புகள், திறந்தவெளி பகுதியிலும், 3 அடுக்கு கட்டிடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவ்வப்போது அறிவியல் தொடர்பான பயிற்சிகள், கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. வருடாந்திர அறிவியல் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயாரிக்கும் புதிய அறிவியல் படைப்புகளை பொதுமக்கள் மத்தியில் விளக்கி காட்சிப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இங்கு 3டி கண்காட்சி அரங்கு, கோளரங்கம், மேஜிக் கண்ணாடி, மாதிரி தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களே ஆய்வு செய்ய வசதியாக இணையதள வசதியுடன் கூடிய சிறப்பு ஆய்வுக் கூடமும் உள்ளது.

இந்நிலையில் நெல்லை அறிவியல் மையத்தில் அடுத்தகட்ட முயற்சியாக இஸ்ரோ மாதிரி காட்சி அரங்கமும், சிறிய ரக விமானமும் அமைக்கப்பட உள்ளன. அரங்கின் இரண்டாவது தளத்தில் இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் செயல்படும் விண்வெளி ஆய்வு தொடர்பான மாதிரிகள் மற்றும் பயன்படுத்தப்படும் விண்வெளி ஆய்வாளர்களின் உபகரணங்கள், ஆடைகள், இஸ்ரோ மையத்தின் சாதனைகள் உள்ளிட்டவைகள் மாதிரிகள் ஆகவும் விளக்கங்கள் ஆகவும் இடம்பெற உள்ளன.

இந்த அரங்கு அடுத்த நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கு பின்னர் செயல்பாட்டிற்கு வர உள்ளது. மற்றொரு புதிய நடவடிக்கையாக குட்டி விமானம் ஒன்று பிரதான கட்டிடத்தின் முன் பகுதியில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த குட்டி விமானம் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளது. அங்கு விமான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நபர்கள் அமர்ந்து பயணிக்கக்கூடிய குட்டி ரக விமானங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் ஒன்றை வான பயிற்சி மையத்தினர் நெல்லை அறிவியல் மையத்திற்கு வழங்கியுள்ளனர். இதற்கான பாகங்கள் அறிவியல் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த குட்டி விமானம் விரைவில் தாம்பரம் விமானப்படை பொறியாளர்களால் ஒன்று சேர்த்து இணைத்து முன்பகுதியில் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த விமானத்தின் பயன்பாடு குறித்த விளக்கங்கள் அதனருகே அமைக்கப்படவுள்ளன. விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கும் விமான பைலட்டாக பணி செய்ய விரும்பும் இளைஞர்களுக்கும் இந்த மாதிரி விமானம் உந்துதலை தருமென அறிவியல் மைய அலுவலர் எம் குமார், பயிற்சியாளர் மாரி லெனின் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: