கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பயணி வந்த விமான ஊழியர் குழுவினர் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க ஏர் இந்தியா அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பயணி வந்த விமான ஊழியர் குழுவினர் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருந்து டெல்லிக்கு கடந்த 25ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, டெல்லியைச் சேர்ந்த அந்தப் பயணி வந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் 14 நாட்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த விமானத்தின் பணிக்குழுவினருக்கு நிறுவனம் அனுப்பியுள்ள உத்தரவில், கொரோனா பாதிக்கப்பட்டவர் பயணம் செய்ததால் தொற்று பரவலுக்கான வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணிக்குழுவினர் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத் துறையினரை அணுகவும். 14 நாட்களுக்குப் பின் சுகாதாரத் துறையினரின் ஒப்புதலைப் பெற்று பணிக்கு திரும்பவும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதே போன்ற அறிவுறுத்தல், அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

போயிங் 787 ரக விமானமான அதில், 200 பயணிகள் வரை பயணிக்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அந்தப் பயணி, வியன்னாவில் இருந்து வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரியளவில் இருப்பதாக தகவல் எதுவும் இல்லை என்பதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்தாலியில் இருந்து சாலைப்பயணம் மூலமாக வியன்னா வந்து அங்கிருந்து டெல்லிக்கு அந்த பயணி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: