நெல்லை, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகள்: வனத்துறை கட்டுப்படுத்துமா?

நெல்லை: கோடை வெயில் கொளுத்த தொடங்கியதால் நெல்லை, தென்காசி மேற்குதொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்ட எல்லையையொட்டி சுமார் 897 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய புலிகள் காப்பங்களில் ஒன்றாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளன. இதன் மறு எல்லை கேரளா வரை பரந்து விரிந்துள்ளது. இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இப்பகுதிகளில் அடிக்கடி இடம் பெயர்வதும் வறட்சி காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு, குடிநீர் தேடி படையெடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் காடுகளில் செழிப்பு ஏற்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் காட்டுபகுதியில் இருந்து வெளியே வருவது குறைந்திருந்தது. அதே நேரத்தில் வனவிலங்குகளில் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தட்பவெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. கோடை வெயில் இப்பொழுதே ெகாளுத்த தொடங்கி விட்டது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் வற்றியதோடு வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களுக்கும், அங்குள்ள விளைநிலங்களுக்கும் வனவிலங்குகள் படையெடுப்பது கடந்த 10 நாட்களாக அதிகரித்துள்ளன. புளியங்குடி, களக்காடு, மணிமுத்தாறு, முண்டந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனகிராமங்களில் யானைகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது.

எலுமிச்சை ஆறு வழியாக வரும் யானகைள் பொட்டல், சீராங்கு பகுதிகளில் உள்ள நெல் உள்ளிட்ட விலைநிலங்களை சேதப்படுத்துகின்றன. விகேபுரம் அருகே வேம்யாபுரத்தில் சிறுத்ைத கூட்டம் முகாமிட்டுள்ளதால் அங்குள்ள விவசாயிகளின் ஆடுகள், காவல் நாய்களை அடித்து கொன்று விடுகின்றன. இதனால் இரவில் இப்பகுதி விவசாயிகள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடைகாலத்தில் வனவிலங்குகள் குடிநீர் தேடி இடம் பெயர்வது வாடிக்கைதான். புகார் வரும் இடங்களில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமிடுகின்றனர். வேம்பையாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகளில் விலங்குகளுக்கு நீர் நிறைத்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி பகுதியில் கரடியை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: