டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கித் சர்மா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக பரவியது.

மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற வடகிழக்கு பகுதிகள் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. இந்நிலையில டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், தென்கிழக்கு டெல்லியின் ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தின்போது, அங்கித் சர்மா என்ற ஐ.பி அதிகாரியும் கொல்லப்பட்டார். சாந்த் பாக் பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் இருந்து அவரின் உடல் மீட்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி 59-வது வார்டு உறுப்பினர் தாகீர் ஹூசைன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்து அங்கித் சர்மா கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: