கோடியக்கரையில் மீனவர் வலையில் சிக்கிய சங்குகள்: அதிக விலைக்கு ஏலம் போனதால் மகிழ்ச்சி

வேதாரண்யம்: கோடியக்கரையில் மீனவர் வலையில் அதிகளவில் சங்குகள் சிக்கியதால் அதிக விலைக்கு ஏலம் போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் நாகை மாவட்டம் உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இங்கு தற்சமயம் மீன்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. அதில் நேற்று பாம்பன் பகுதி மீனவர்கள் வலையில் ஆளுயர மயில் மீன்கள் கிடைத்துள்ளன. அப்போது மீன்பிடி வலையில் சங்குகளும் அதிகளவில் சிக்கியுள்ளன.

இந்த சங்குகள் கோடியக்கரையிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ தொலைவில் கிடைப்பதாகவும் தற்சமயம் காற்று வீசும் இந்த மூன்று மாதங்கள் மட்டும் தான் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். பாம்பன் மீனவர் வலையில் கிடைத்த சுமார் 80 சங்குகள் ரூ.55 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்குகள் ஏலம் எடுத்த வியாபாரிகளால் கொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இதை கொண்டு வளையல்கள், மணிகள் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும் தங்கத்தை மக்கள் விரும்புவது போல் வெளிநாட்டில் இந்த சங்கு மணிகளுக்கும் வளையல்களுக்கும் நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: