டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பின் கெஜ்ரிவால் உறுதி

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளார்.டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முன்னதாக, கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் நேற்று அறிவித்து இருந்தார்.

Advertising
Advertising

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபர்களிடம் மேலும் பேசுகையில்,டெல்லி வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவை டெல்லி அரசே ஏற்கும். டெல்லியில் வன்முறைகள் தற்போது குறைந்து உள்ளது. டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க திட்டங்கள் வகுக்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும்.வன்முறையால் சேதமடைந்த சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.தவறு செய்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் இரு மடங்கு தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

*குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது.

*இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

*சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர் கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

*தற்போதுவரை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜேபிசி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மேலும் 200க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

*144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

*இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பார்பர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: