டெல்லியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல :டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

டெல்லி: டெல்லி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை பற்றி பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ முத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோரின் வெறுப்பு பேச்சுக்களும் டெல்லி கலவரம் தூண்டப்பட்டதற்கு ஒரு காரணம் என பல தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம்

இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கும்படி  போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் நீதிபதி முரளிதர் பணியிட மாற்றத்தை அடுத்து மேற்கண்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நரம்பாய் பட்டேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்தவை பின்வருமாறு..

நீதிபதிகள் : டெல்லி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேத்தா : காவல்துறை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்ய அவகாசம் வேண்டும். கலவர சூழ்நிலையை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு ப்பதிவு செய்வதற்கு இது உகந்த நேரம் அல்ல.

டெல்லி காவல் துறை : நேற்று 11 FIR பதிவு செய்த நிலையில் இன்று 48 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் வன்முறையை தூண்டும் பேச்சு தொடர்பாக FIR பதிவு செய்யப்படவில்லை. தற்போதைய சூழலில் வழக்குப் பதிவு செய்வது அமைதி, இயல்பு நிலை திரும்ப எந்த வகையிலும் உதாவது.

மூத்த வழக்கறிஞர் கோன்ஸால்வஸ்  : இந்த விவகாரத்தை பொறுத்தவரை முதலில் FIR பதிவு செய்ய வேண்டும். விசாரணையில் தவறு செய்யவில்லை என்று உறுதியானால் FIRஐ ரத்து செய்யலாம்.வெறுப்பு பேச்சு அதன் பின்னர் பாஜக தலைவர்களின் முழக்கங்களை கணக்கிலெடுக்க வேண்டும்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேத்தா : மத்திய அரசையும் எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்க வேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதி : மத்திய அரசும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை பற்றி பதில் அளிக்க மத்திய அரசு உட்பட அனைத்து எதிர்மனுதாரர்கள்  4 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

வடகிழக்கு டெல்லியில்  சிஏஏ.வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்திய இரு குழுக்கள் இடையே இரு தினங்களுக்கு முன், மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவர போராட்டத்தில் இதுவரை மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர். 48 போலீசார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 70 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளனர். மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ முத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோரின் வெறுப்பு பேச்சுக்களும் கலவரம் தூண்டப்பட்டதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

வன்முறையை தூண்டும் பேச்சுக்கள்

கடந்த மாதம் டெல்லி  சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘சிஏஏ.வுக்கு எதிராக போரட்டம் நடத்தும் தேசத் துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்,’ என பேசினார். இது குறித்து டெல்லி போலீசில், இந்திய இளைஞர்  காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இதேபோல், பா.ஜ.வில் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா, வடகிழக்கு டெல்லியின் மஜ்பூர் பகுதியில் சவுக் பகுதியில் நடந்த சிஏஏ ஆதரவு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அங்கு இவர் வெறுப்பை தூண்டும்  வகையில் பேசியதை அடுத்துதான் கலவரம் வெடித்தது. டெல்லியில் சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை, போலீசார் 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்தவில்லை என்றால், நான் தெருவில் இறங்கி அப்புறப்படுத்வேன்’ என அவர்  எச்சரிக்கை விடுத்தார். பா.ஜ எம்.பி பர்வேஸ் வர்மா டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், ‘டெல்லியில் பா.ஜ ஆட்சிக்கு வந்தால், ஒரு மணி நேரத்தில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் விரட்டப்படுவர். மேலும், எனது தொகுதியில் அரசு நிலத்தில்  கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் ஒரு மாதத்துக்குள் அகற்றுவோம்,’ என்றார்.

Related Stories: