டெல்லி வன்முறை மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது; போராடினாலும், CAA-யை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இல்லை...நடிகர் ரஜினி பேட்டி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக்களிடையே வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதலில், கடந்த 4 நாட்களாக டெல்லியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் குழுக்கள் வடகிழக்கு  டெல்லியின் சில  பகுதிகளில் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்து கொளுத்தி உள்ளன. ஒருவர் மீது ஒருவர் செங்கல், கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், சாலைகள் முழுவதும் கோர காட்சிகளாக காணப்படுகின்றன. கலவரம் காரணமாக  இதுவரை தலைமை காவலர் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி:

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியை காரணம் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சில கட்சிகள் மதத்தை வைத்து, போராட்டங்களை தூண்டுகின்றன. மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சில பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களே என்னை பாஜகவின் ஊதுகுழல் என கூறுகின்றனர். என்ன உண்மையோ அதை சொல்கிறேன், என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது. என்.ஆர்.சி குறித்து மத்திய அரசு  தெளிவாக கூறிய பிறகும், குழப்பம் எதற்கு? என்று கூறினார். அமைதி வழியில் போராட்டம் செய்யலாம்; ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்  ஆளாக நிற்பேன் என்றே கூறினேன்.

டெல்லி போராட்டங்களுக்காக மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற தலைவர் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை  என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். டெல்லி வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று காட்டமாக கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன  போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப்பெறாது என நினைக்கிறேன் என்றார்.

Related Stories: