புதுவை பல்கலைக்கழகத்தில் 20 நாட்களாக போராடிய மாணவர்கள் வெளியேற்றம்: போலீசுடன் தள்ளுமுள்ளு

காலாப்பட்டு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 20 நாட்களாக போராட்டம் நடத்திய மாணவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுச்சேரி  மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர். தற்போது 100 மாணவர்கள், உயர்த்தப்பட்ட கல்வி  கட்டணத்தை குறைக்க  வேண்டும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி  மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 20 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து  கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைந்து   செல்லுமாறு போலீசாரும், பல்கலைக்கழக நிர்வாகமும் அறிவுறுத்தியது.  இருப்பினும் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்  எனக்கூறி மாணவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.இதையடுத்து  போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த 50 மாணவர்களை  போலீசார் குண்டு கட்டாக வெளியேற்றி விடுதிக்கு அழைத்து  சென்றனர். மேலும் பல்கலைக்கழக  வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் போலீசார்  குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: