யாருடைய ஆதரவுமின்றி பனை ஓலை விசிறி செய்து பிழைப்பு நடத்தும் முதியவர்: உதவிக்கரம் நீட்ட அரசும் முன்வரவில்லை

தா.பழூர்: தா.பழூர் அருகே யாருடைய ஆதரவுமின்றி பனை ஓலை விசிறி செய்து பிழைப்பு நடத்தி வரும் முதியவருக்கு உதவித்தொகை பெற அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் தோப்பு தெருவை சேர்ந்த குஞ்சிதபாதம் (79). இவரும், இவரது மனைவி ரத்தினம் (73). இருவரும் திருமணமாகி குழந்தை இல்லாத குறையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீடு இல்லாததால் மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து கூரை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். வயது முதிர்ந்த குஞ்சிதபாதம் தினமும் காலையில் எழுந்து தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தா.பழூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் சென்று அங்கு பொது இடங்களில் உள்ள பனை ஓலை குருத்துக்களை வெட்டி எடுத்துக்கொண்டு வீடு வந்து சேருவார். பின்னர் அந்த பனைஓலை மட்டைகளை சரிசெய்து அவற்றை வெயிலில் காய வைத்து, பிறகு படிமானம் வைத்து இரண்டு நாள் கழித்து மீண்டும் அந்த மட்டைகளை அழகுபடுத்தி அவற்றிற்கு வண்ணம் தீட்டப்பட்டு, மேலும் அழகூட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது வெயில் காலம் என்பதால் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் இந்த பனை ஓலை விசிறிகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஓலை விசிறிகள் தற்போது ரூ.10 முதல் 15 வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து தாத்தா குஞ்சிதபாதம் கூறுகையில்,தான் பனை ஓலை விசிறி மட்டைகளை தயாரிக்கும் பணி செய்து வருகிறேன். தனது செந்த ஊர் தஞ்சை மாவட்டம் அருகே உள்ள காமாட்சிபுரம். நாங்கள் தா.பழூருக்கு வந்து 36 வருடம் ஆகிறது. பனை ஓலை விசிறி மட்டைகளை தயாரிக்கும் பணி செய்து, இதனை விற்க சைக்கிளில் வைத்துக்கொண்டு கும்பகோணம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன். இவற்றை வாங்குவதற்காக அரியலூர், விருத்தாச்சலம் போன்ற பெருநகரங்களில் இருந்தும் தனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் தான் உருவாக்கும் இந்த விசிறி மட்டைகளை சைக்கிளில் எடுத்துக்கொண்டு அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், கும்பகோணம் உள்ளிட்ட பெருநகரங்களிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் தனது மிதி வண்டியிலேயே கொண்டுசென்று விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது உடல்நிலை முடியாத காரணத்தினாலும், வயது முதிர்வாலும் சைக்கிளில் அவ்வளவு தூரம் செல்ல இயலவில்லை.

இதனால் தற்பொழுது தயாரிக்கும் பனையோலை விசிறி மட்டைகளை கடை வியாபாரிகளிடம் விற்று வருகிறேன்.

இந்த தொழிலில் தனக்கு போட்டிகள் அதிகமாக உள்ளது. திருச்சி, பரங்கிப்பேட்டை, வேதாரண்யம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பனையோலை விசிறி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கடை உரிமையாளர்களுக்கு அந்தந்த பகுதியில் இருந்தும் மொத்த வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மேலும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து வைத்தும் ஜெனரேட்டர் மூலமும் மக்கள் பயன்படுத்தி வரும் காலத்தில் பல்வேறு போட்டிகளும் உள்ளன. இவர்களுக்கு மத்தியில் தான் கொண்டுசெல்லும் கைவினை விசிறிக்கு மதிப்புக் கொடுத்து பெரும் ஆதரவுடன் வாங்கி வருகின்றனர். இருப்பினும் தான் ஒருவரது உழைப்பில் மட்டும் அதிகப்படியாக மட்டைகள் கொடுக்க இயலாததால் குறைவான அளவே தர முடிகிறது. இந்த பனையோலை விசிறி மட்டை தொழில் அனைத்து மாதங்களிலும் விற்பனை செய்ய முடிகிறது. இருப்பினும் பனிக்காலங்களில், மழைக்காலங்களில் குறைவான அளவே விற்பனை ஆகின்றன.

தற்போது வெயில் காலம் துவங்குவதால் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால், தற்போது பனை ஓலை விசிறி விற்பனை அதிகமாகும். இவற்றை கடையில் விற்பனை செய்யும்போது தனக்கு ஒரு பனையோலை விசிறி மட்டைக்கு 15 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இவற்றை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்தால் 20 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆனால் உடல் சரியாக ஒத்துழைக்காததால் என்னால் வெகு தூரமாக செல்லமுடியவில்லை. ஆகையால் இதை கடைகளில் கொண்டு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.இதுகுறித்து குஞ்சிதபாதத்தின் மனைவி ரத்தினம் கூறுகையில்,தங்கள் யாருமில்லாத அனாதையாக வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் தனக்கு ஆயிரம் ரூபாய் பணம் கூட தர அலுவலர்கள் மறுக்கின்றனர். எனது கணவர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டைகளை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு செல்வார். அதில் 1300 ல் 1500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதை வைத்துதான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். தினமும் அவர் கொண்டு வரும் மட்டைகளுக்கு வண்ண ஓலைகளால் அலங்காரம் செய்வது மற்றும் சிறு சிறு உதவிகளை அவருக்கு உதவியாக செய்து வருகிறேன். தனக்கு வேற எந்த தொழிலும் தெரியாது. ஆகையால் எனது கணவருக்கு உதவியாக கூடவே இருந்து வருகிறேன். நாங்கள் கூரை வீட்டில் மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்து வருகிறோம்.

இந்த கூரை வீட்டில் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி வீடுகளில் தண்ணீர் புகும். இது போன்ற பல்வேறு இன்னல்களில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை. இந்த நிலையில் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை கூட எனக்கு தர மறுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்று, அங்குள்ள அலுவலர்கள் சரியான பதில் கூறாமல் அலைக்கழிப்பு செய்ததால் வீடு திரும்பி விட்டோம். இங்கு உள்ள அரசு அலுவலர்களை நேரில் சென்று பார்த்தும் எந்த பயனும் இல்லை. சிலநேரம் உடல்நிலை சரியில்லை என்றால் பணம் இல்லாமல் பட்டினி கூட கிடந்ததுன்டு என்று கண் கலங்குகிறார். எங்களைப்போல் ஆதரவு இன்றி இருக்கும் முதியவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க முன்வர வேண்டும். பின்வரும் காலங்களில் எங்களால் இதுபோல் உழைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகையால் எனக்கு அரசு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: