மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடையை உடைத்து 15 லட்சம் துணிகர கொள்ளை: சிசிடிவி மூலம் மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: மயிலாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பல்லக்கு மாநகரில் டாஸ்மாக் கடை (எண்:1002) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும் இதனால், அந்த கடை முன்பு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். தினசரி மதியம் 12 மணிக்கு இந்த கடை திறக்கப்பட்டாலும், காலை 10 மணி முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து, மதுபாட்டில்கள் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை டாஸ்மாக் கடையின் முன் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடையின் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஊழியர் ராஜபாண்டி ஆகியோர் மதியம் 12 மணிக்கு வந்து கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, கல்லா பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த வசூல் பணம் ₹14.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

கடையின் பூட்டு உடைக்கப்படாமல் எப்படி கொள்ளையர்கள் உள்ளே வந்தனர் என்று டாஸ்மாக் ஊழியர்கள் பார்த்த போது, கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கடை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கடையின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களை சிக்க வைக்கும் நோக்கில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: