நீண்ட இழுபறிக்குப் பிறகு காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது

புதுடெல்லி: கடந்த ஓராண்டாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்த காவிரி ஆணையத்தின் கூட்டம் நீண்ட இழுபறிக்கு பிறகு, டெல்லியில் இன்று கூடுகிறது. நான்கு மாநிலங்களின் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கி அதில் ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாக பிரித்து தனித்தனியாக 9 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஒழுங்காற்று குழுவின் கூட்டம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

இது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும், இந்த கூட்டத்தில், 2020ம் ஆண்டுக்கான நீர் பங்கீட்டு பிரச்னை, தமிழகத்தில் தற்போது வரவிருக்கும் கோடைக் காலத்தின்போது குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை காவிரியில் இருந்து எப்படி பெறுவது தொடர்பாக  தமிழகத்தின் தரப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: