மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை அமைத்து, தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி செப்டம்பர் மாதம்  24ம் தேதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். ஆணையத்தின் விசாரணை காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா தரப்பு உள்ளிட்ட 154  பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கியிருந்தவர்கள், உறவினர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஆறுமுகசாமி  ஆணையம் விசாரிக்க தடை கோரி விதிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 10 மாதங்களாக தடை நீடிக்கும் நிலையில் ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: