ஏரி, குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க, இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் : ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை :ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து மார்ச் 9ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் தடுக்க கோரிய வழக்கு

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள்,  கோவில் குளங்கள், அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் கோவில் குளங்களில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் ஆகியவற்றில் மூழ்கி உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்...

மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாவட்டம் தோறும் ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததை, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நினைவூட்டினார்..இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: