மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாகும். அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். கோயிலில் ஆண்டுதோறும்  மாசி பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நேற்று காலை நடைபெற்றது.

சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அங்காளம்மன் விஸ்வரூபம் எடுத்து தோஷம் நீக்கிய நிகழ்வை நினைவு கூரும் விதமாக இந்த மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதற்காக கொழுக்கட்டை, பொரிகடலை,  சிறுதானியங்கள், காய்கறிகள், சாப்பாடு, கருவாடு போன்றவற்றை வேண்டுதலுக்காக பக்தர்கள் மயானத்தில் குவியலாக குவித்து வைத்திருந்தனர். பின்னர் பூசாரிகள் மூலவர் சன்னதியில் இருந்து கப்பர மூலம் என்கிற பிரம்மனுடைய தலையை  ஆக்ரோஷத்துடன் சுடுகாடு பகுதிக்கு எடுத்து சென்றனர். அங்கு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பூசாரிகள் பக்தர்கள் மீது தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாரி இறைத்து கொள்ளையிட்டனர். மேலும் மயான‍ கொள்ளையில் பக்தர்கள்  அம்மன் வேடமணிந்தும், உயிருள்ள கோழிகளை வாயில் கடித்தும் ஆக்ரோஷமாக ஆடியபடி மயானத்துக்கு வந்தடைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அங்காளம்மன் தங்க நிற மரப்பல்லக்கில் பெண் பூத வாகனத்தில் வீதியுலாவும், 26ம் தேதி  தீமிதி விழாவும், 28ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

Related Stories: