வண்ணாரப்பேட்டையில் 10வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம்: டிரம்ப் இந்தியா வரவும் எதிர்ப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நேற்று 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டவும் அவர்கள் முடிவு  செய்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி  வருகின்றன.இந்நிலையில் கடந்த 14ம்தேதி வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதை கண்டித்து, தமிழகம் முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 10வது நாளாக நேற்று, முஸ்லிம் பெண்கள், குழந்ைதகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், தங்கசாலை, சிமிட்ரி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் தினந்ேதாறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வருகை தருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். இதனால் போராட்ட பகுதியில் பதற்றம்  நிலவுவதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சென்னை புளியந்தோப்பு டிக்காஸ் சாலை பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் தொடங்கினர்.இதை அறிந்ததும் சம்பவ இடத்துக்கு புளியந்தோப்பு போலீசார் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  புளியந்தோப்பு பகுதியில் பதற்றம் நிலவுகிறது.இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘‘தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.

Related Stories: