சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தமிழக அரசின் சட்டம் முதல்வரால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்த அறிவிப்பாணையை தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
காவிரி டெல்டா பகுதிகளை ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களிலிருந்து பாதுகாத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் படி உடனடியாக ஏற்கனவே செயல்பட்டு வரும் அழிவுத்திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்த தமிழக அரசு,
அந்த முதலீட்டு மண்டலத்தின் கீழ் கடலூரில் ரூ50,000 கோடி மதிப்பில் அமையவிருக்கும் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் கெமிக்கல் ஆலையையும், நாகப்பட்டினத்தில் ஒரு மில்லியன் டன் உற்பத்தி திறனில் இயங்கி வந்த சிபிசிஎல் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை 9 மில்லியன் டன்னாக ஆக விரிவாக்கம் செய்யும் திட்டத்தினையும் கைவிட்டு, காவிரி டெல்டா ஒரு முழுமையான பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அமைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.