லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்கு கடத்தப்படுகிறது கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஒட்டுக்கறை ஊழல்: உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டம் மட்டுமே தமிழகத்தில் ரப்பர் சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டமாக இருந்து வருகிறது. மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது. ரப்பர் ஷீட் விலை உயரும் போது இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயரும். பணப்புழக்கமும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது.  இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதில் அரசு ரப்பர் கழகம் வாயிலாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு ரப்பர் கழக கீரிப்பாறை தொழிற்கூடத்தில் ஒட்டுக்கறை இருப்பு வைத்து கடத்தி விற்பனை செய்வதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் ஜனவரி மாத கணக்கின்படி 16 டன் ஒட்டுக்கறை ஸ்டாக் கணக்கு காட்டிய ரப்பர் தொழிற்சாலை அதிகாரி, 28 டன் இருப்பு வைத்துள்ளார். 12 டன் அதிகமாக இருப்பதை தொழிலாளர்கள் தெரிந்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரப்பர் பால் வடித்து எடுத்தபிறகு குவளைகளில் இருக்கும் உலர்ந்த ரப்பர் ஒட்டுக்கறை ஆகும். இதுவும் ரப்பருக்கு இணையான மதிப்பு உடையது ஆகும்.  இது தொடர்பாக விசாரணை நடந்தது. இதில் ரப்பர் கழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்று பார்த்தபோது 12 டன் அதிகம் சரக்கு இருப்பதை கண்டுபிடித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரப்பர் ஒட்டுக்கறை தண்ணீரில் போட்டதால் எடை அதிகரித்ததாக கூறி விசாரணைக்கு வந்த அதிகாரிகளை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர். இது தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு  ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:அரசு ரப்பர் கழகத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர்களாக வருபவர்களுக்கு ரப்பர் சம்பந்தமாக பெரிய அளவில் தெரியாத நிலையை பயன்படுத்தி ரப்பர் கழகத்தில் வேலைபார்க்கும் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை அதிகாரிகள், நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற சிலரும் சேர்ந்து பல லட்சம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக அதிகாரி பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரப்பர் மற்றும் ஒட்டுக்கறை என்ற ஸ்கிராப் மோசடி செய்து விற்பனை செய்துள்ளனர். ரப்பர் ஒட்டுக்கறை தொடர்பாக விசாரிக்க சீனியர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டருக்கு நிர்வாக பொறுப்பு வழங்கி விசாரணை அதிகாரியாக நியமித்து அங்கு நடைபெற்ற மாபெரும் ஊழலை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரப்பர் ஒட்டுக்கறை தண்ணீரில் போட்டு ஊறி எடை அதிகரித்துள்ளது என்று ரப்பர் தொழிற்சாலை அதிகாரி கூறியுள்ளார். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரப்பர் திருட்டை மறைத்து பங்கு போடுவதற்கு முயற்சிக்கும் நிலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ரப்பர் வாரியத்தின் கோட்டயத்தில் உள்ள விஞ்ஞானிகளை கொண்டு ஒரு கிலோ ஒட்டுப்பால் தண்ணீரில் போட்டால் இரண்டு கிலோவாக ஊதி பெருகிவிடுமா? என்பதை பரிசோதனை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். அந்த பரிசோதனையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளையும் இணைத்து ஒரு உயர்மட்ட குழு முழுமையாக விசாரணை நடத்தி நீண்டகாலமாக அங்கு நடைபெறுகின்ற ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை அதிகாரியை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க காலம் தாழ்த்தப்படுமானால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: