அதிர்ச்சியில் ஆட்டோமொபைல் துறையினர் வாகன விற்பனை ஜனவரியிலும் சரிந்தது

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜனவரியில் 4.61 சதவீதம் சரிந்துள்ளதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. இதுபோல், பாதுகாப்பு விதிகள், பிஎஸ் 6 தர வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழ்நிலை போன்றவற்றால் மேலும் நிதிச்சிக்கலுக்கு இந்த துறை ஆளானது. அதிலும், பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வாகன டீலர் ஷோரூம்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பாரத் ஸ்டேஜ் 6 இன்ஜின் வாகனங்களை மட்டுமே வரும் ஏப்ரல் முதல் விற்க வேண்டும். இதனால் வாகனங்கள் விலை அதிகரிக்கும். இருப்பினும், இப்போது தயாரித்து வைத்துள்ள வாகனங்களை கூட விற்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை சரிந்துள்ளது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுபோல், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு ஜனவரி மாத வாகன விற்பனை நிலவரத்தை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரியில் 2,90,879 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் விற்பனை 4.61 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், நாடு முழுவதும் 1,432 ஆர்டிஓ அலுவலகங்களில், 1,223 ஆர்டிஓ அலுவலகங்களில் திரட்டிய தகவல்களின்படி பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 3,04,929 ஆக உள்ளது. இதுபோல், டூவீலர் விற்பனை 8.82 சதவீதம் சரிந்து 12,67,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டள்ளன. முந்தைய ஆண்டு ஜனவரியில் இது 13,89,951 ஆக இருந்தது. வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 6.89 சதவீதம் சரிந்து, 82,187 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்று சக்கர வாகன விற்பனை மட்டும் 9.17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 63,514 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து வாகன விற்பனை 7.17 சதவீதம் சரிந்து 17,50,116 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 6 வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வர உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்குவது குறி்த்து முடிவு எடுக்கவில்லை. சிலர் இந்த முடிவை ஏப்ரல் மாதம் வரை ஒத்திப்வைத்துள்ளனர் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே தெரிவித்துள்ளார்.  பொருளாதார மந்த நிலையால் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கி விட்டது. இதனால் மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவுக்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத விற்பனை சரிவால், கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மோசமான மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது.

Related Stories: