ஆவடி, வேலூர், தஞ்சை, நெல்லை, திண்டுக்கல், ஓசூர் 6 மாநகராட்சிகளில் வரி வசூல் குறைவு : நடவடிக்கை எடுக்க கமிஷனர்களுக்கு உத்தரவு

வேலூர்:  தமிழகத்தில் ஆவடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில் வரி வசூல் குறைந்துள்ளது. இந்த மாநகராட்சிகளில் வசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர்களுக்கு நகராட்சி நிர்வாக ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஆவடி, வேலூர், திண்டுக்கல், ஓசூர், சேலம், நாகர்கோயில், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், மதுரை, ஈரோடு ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். இதுவே, மாநகராட்சிக்கு பிரதான வருவாய். இதுதவிர, குடிநீர் கட்டணம், தொழில் வரி, விளம்பர கட்டணம், குப்பை வரி, குத்தகை மற்றும் ஏலம் விடுவதன் மூலம் வருவாய் ஈட்டப்படும். இந்தாண்டு வரி வசூலிக்கும் பணிகள் மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி, ஓசூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில் வரி வசூல் குறைந்துள்ளது. இதையடுத்து அந்த மாநகராட்சிகளில் வரி வசூல் அதிகரிக்க வேண்டும். வரி செலுத்துவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் ஆணைய அதிகாரிகள் அந்தந்த மாநகராட்சி கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் (18ம் தேதி) 12 மாநகராட்சிகளில் வரி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆவடி ₹8 லட்சத்து 4 ஆயிரத்து 482, திண்டுக்கல் 15 லட்சத்து 4 ஆயிரத்து 650, ஓசூர் 12 லட்சத்து 62 ஆயிரத்து 511, சேலம் 76 லட்சத்து 97 ஆயிரத்து 683, நாகர்கோயில் 1 கோடியே 18 லட்சத்து 10 ஆயிரத்து 637, தஞ்சாவூர் 52 ஆயிரத்து 665, வேலூர் 21 லட்சத்து 77 ஆயிரத்து 357, திருச்சி 81 லட்சத்து 76 ஆயிரத்து 357, திருநெல்வேலி 46 லட்சத்து 10 ஆயிரத்து 733, திருப்பூர் 97 லட்சத்து 99 ஆயிரத்து 451, மதுரை 1 கோடியே 17 லட்சத்து 81 ஆயிரத்து 411, ஈரோடு 59 லட்சத்து 38 ஆயிரத்து 236 வரி வசூலிக்கப்பட்டது. இதில் ஆவடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரி வசூலை அதிகரிக்க வேண்டும் என்று நகராட்சிகள் நிர்வாக ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: