மேலவளவு கொலை வழக்கு: விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை: மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை உயர்நீதிமன்ற கிளை தளர்த்தியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேரைக் கடந்த 1997ம் ஆண்டு ஜுன் 30ம் தேதி ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொடூர வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில், 3 பேர் அண்ணா பிறந்தநாளையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் கடந்த 2008ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். உடல்நலக்குறைவால் ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மீதமுள்ள 13 கைதிகளையும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, கடந்தாண்டு நவம்பர் 9ம் தேதி 13 பேரும் தமிழக அரசால் முன்விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை மேலவளவு ஊருக்குள் 13 பேரும் நுழையக் கூடாது. அதுவரை வேலூரில் தங்கியிருக்குமாறு, உத்தரவு பிறப்பித்தது. மேலும், வழக்கு முடியும் வரை 13 பேரும் வேலூரில் தங்கியுள்ளதை மதுரை, வேலூர் எஸ்பிக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதையடுத்து, 13 பேரும் வேலூரில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், மேலளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. 13 பேரும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை விலக்கிக் கொண்டுள்ளது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து ஆஜராகாததால் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் விலக்கியுள்ளது. மேலும், முக்கிய வழக்கில் மனுதாரர் தரப்பு ஆஜராகாதது வேதனையளிப்பதாக நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: