உ.பி. வன்முறையில் 22 பேர் மரணமடைந்தனர்..: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 22 பேர் கொல்லப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து டிசம்பர் 20 மற்றிம் 21ம் தேதிகளில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். போலீசாரின் அராஜக நடவடிக்கையால் தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்துள்ள உறுதி மொழி அறிக்கையில் வன்முறையின்போது 22 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதி ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான 322 பேர் தற்போது வரை ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் வன்முறையில் 45 போலீசாரும் காயமடைந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போராட்டத்தின்போது ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், இந்த சேதத்துக்கான இழப்பீட்டை, போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்க, மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக, பலருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: